TamilsGuide

பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி ஈபிடிபியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.

அதற்கு பொறுப்பாக தனது காசோலையை அவர் வழங்கியிருந்தார். மதுபானசாலை அனுமதிப் பத்திரம் கிடைக்காத நிலையில், குறித்த காசோலையை வங்கியில் வைப்பிட்ட போது அதில் பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கியால் திருப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரின் நிதி மோசடி குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment