நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து , ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப” இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகியுள்ளன.
எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்- என நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.


