பனாமா நாட்டிலுள்ள Chiquita வாழைப்பழ உற்பத்தி நிறுவன பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, கனடாவில் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு அல்லது விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
Chiquita என்பது வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய நிறுவனம் ஆகும். அதன் வாழைப்பழங்கள் கனடா, அமெரிக்கா உட்பட 47 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக, பனாமா நாட்டிலுள்ள Chiquita நிறுவனத்திலிருந்துதான் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக அளவில் இறக்குமதி செய்யபடுகின்றன.
விடயம் என்னவென்றால், பனாமா நாட்டிலுள்ள Chiquita நிறுவனத்தில் ஒரு பெரிய பிரச்சினை நிலவுகிறது.
பணியாளர்களின் ஓய்வூதியத்தை பாதிக்கக்கூடிய வகையில் அரசு கொண்டுவந்துள்ள சில விதி மாற்றங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஆசிரியர்கள் முதல் வாழைப்பழ உற்பத்தியாளர்கள் வரை ஏராளமானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அதைத்தொடர்ந்து, Chiquita நிறுவனம் தனது 6,500 பணியாளர்களில் 5,000 பேரை வீட்டுக்கு அனுப்பியது.
மீதமுள்ளவர்களையும் வேலைநீக்கம் செய்ய அந்நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
மே மாத நிலவரப்படி, வேலைநிறுத்தம் காரணமாக Chiquita நிறுவனத்திற்கு 75 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆக, Chiquita நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கனடாவில் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது வாழைப்பழங்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


