ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட PS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்றையதினம் (06) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவின் பிரதானியாக மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ருவன் ஜயசுந்தர, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிர்வாக அதிகாரி கே.ஏ.எஸ்.ஸ்ரீபாலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், அதிகாரிகளின் நேர்மையை உறுதிப்படுத்தி, இலஞ்சம் மற்றும் ஊழலற்ற அரச சேவையை இலங்கைக்குள் உருவாக்குவதன் அத்தியாவசிய முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் முக்கிய கவனத்தை செலுத்தி அரச பிரிவிற்குள் பலம்வாய்ந்த ஊழல் எதிர்ப்பு வழிகளை அறிமுகப்படுத்தல், அரசியல் யாப்பின் 156வது சரத்தின் கீழ் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பேரவை (UNCAC) உள்ளிட்ட ஏனைய ஊழல் எதிர்ப்பு சர்வதேச பேரவையின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தல், 2023ம் ஆண்டின் இலக்கம் 9ல் குறிப்பிடப்படும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு தேசிய செயற்பாட்டு திட்டம் (2025-2029) என்பவற்றிற்காக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அரச பிரிவிற்குள் ஊழல் தடுப்பு செயற்பாடுகளின் பிரதான முயற்சியாக அரச பிரிவு முழுவதும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், மற்றும் நேர்மையை ஊக்குவிக்கும் கலாசாரத்தை உருவாக்கி, அனைத்து பிரஜைகளுக்கும் பயன்மிக்க அரச சேவையை வழங்குதல் என்பதே இதன் நோக்கமாகும்.
மேலும், பிரதமர் அலவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள், யோசனைகள், குற்றச்சாட்டுக்கள் என்பவற்றிற்கென இரண்டு முறைப்பாட்டு பெட்டிகள் அலரி மாளிகை மற்றும் சிறிமதிபாயவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக 071113098 என்ற வட்ஸ்அப் இலக்கம், அல்லது 0114354754 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது iau@pmoffice.gov.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


