TamilsGuide

மகிந்த வீட்டில் சிக்கப்போகும் அதிமுக்கிய அரசியல்வாதி - பல அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திஸ்ஸமஹாராமவில் உள்ள அவரது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தவறான தகவலை அளித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் சமல் ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் உள்ள சொத்து சமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல, மாறாக வேறொருவரின் பெயரில் உள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

மேலும் அங்கு வீடு இல்லை எனவும் அங்கு நெல் களஞ்சியசாலை மட்டுமே இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சொத்து சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 27ஆம் திகதி அன்று, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ், குறித்த கொடுப்பனவுகளை தங்கள் அதிகார வரம்பின் கீழ் செய்ய முடியாது என இழப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மறைக்கப்பட்ட ரகசியம்

எனினும் 2023ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 20ஆம் திகதி மதிப்பீட்டுத் துறையின் மதிப்பீட்டாளர் ஒருவர், அங்கு ஒரு வீடு இருந்ததாகவும், அதன் மதிப்பு 1,48,00,000 ரூபாய் எனவும் கூறி மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, நெல் களஞ்சியத்திற்கு ஏற்பட்ட சேதம் 222,600 ரூபாய் மற்றும் இல்லாத வீட்டிற்கு 1,48,00,000 ரூபாய் பெற்றுள்ளனர். அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 21ஆயிரத்து 600 ரூபாய் மோசடியாக பெற்றுள்ளனர்.

இந்தத் தொகையை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 

Leave a comment

Comment