சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டை பண்ணைகள், மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதாகவும், இதனால் அக்கழிவுகளை மீன்கள் உட்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மீன்களை மனிதர்கள் உட்கொள்வதனால் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன எனவும் அவை இதுவரையில் அகற்றப்படவில்லை எனவும், இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.


