TamilsGuide

ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர். ?

ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு, அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால் அது குற்றம்தானே ?

இதோ, அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி :

“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா ?”

இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :

“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன்.

ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.

காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.

படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவர்களும் சினிமா பார்க்கிறார்கள்.

அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.

நடிகன் என்ற முறையில் எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது."

இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம். ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது ?

இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன.

“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.

லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”

( ஜனவரி 17 - எம்ஜிஆரின் பிறந்த தினம்)

John Durai Asir 
 

Leave a comment

Comment