TamilsGuide

வடக்கில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு  வரும் 21 ஆம் திகதி  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment