TamilsGuide

இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் குழு அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இவ் விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறைசார் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Leave a comment

Comment