பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் முத்த மழை என்ற பாடலை மேடையில் பாடகர் சின்மயி பாடினார். இப்பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் படத்தில் இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் இப்பாடலை சின்மயி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலரும் தீ பாடிய முத்த மழை வெர்ஷனை விட சின்மயி பாடிய வெர்ஷனே அழகாக இருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது போன்ற கருத்துகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சின்மயி பேசியது " நான் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. தீ-ஆல் அன்று வர இயலவில்லை அதனால் நான் மேடையில் பாடினேன். என்னுடைய வேலையை அன்று செய்தேன். பாடகி தீ-க்கு ஒரு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க இயலாது. தற்பொழுது உள்ள சூழல் நான் பாடிய வெர்ஷனும் அவர் பாடிய வெர்ஷனும் போட்டிப்போட்டு ஒரு மல்யுத்த போட்டி நடப்பது போன்ற உணர்வு இருக்கிறது. ஒரு கலைஞனாக நான் அவருடைய பாடலை மதிக்கிறேன். இது போட்டி அல்ல. நான் கண்டிப்பாக தீ- யிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் வளர்ந்து வரும் இளம் பாடகி. இன்னும் 15 வருடங்களில் அவர் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷலை விழுங்கும் திறனுடையவராக இருப்பார். அவருக்கு என ஒரு தனி இடம் இருக்கும். எங்கள் இருவரையும் ஒப்பிடுவது அவசியமற்றது என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.


