பட்டப்பகலில் பிக்கரிங் நகரில் கடந்த வியாழன் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்திற்குப்பின் ஒன்ராறியோ அடங்கிலும் பாதுகாப்புப் பிரிவின் அலாரம் ஒவ்வொருவரின் கைத்தொலைபேசிகளிலும் ஒலித்தது.
14 வயது இளைஞன் 80 வயதான மூதாட்டியை கத்தியால் பலமுறை குத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டான். குடியிருப்புக்கு வெளியே , "படுபயங்கரமான காயங்களுடன் அப்பெண்மணி கண்டுபிடிக்கப் பட்டு அவசரசிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப் பட்டு அங்கு மரணமானார்.
இந்தக் கொடூரச் செயலின் சூத்திரதாரியை அன்று நள்ளிரவில் பொலிஸார் கைதாக்கினார்கள்.
முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியையான அம்மூதாட்டி எல்லோருடனும் மிக மிக அன்பானவரென்றும். நோய் வாய்ப்பட்ட தன் கணவருடனும், பிரியமிக்க நாய்களுடனும் Pickering ல் நெடுங்காலமாக வசித்து அந்த தெருக்களில் உலவுகிற அற்புத அம்மையார் எனவும் அவரை அறிந்தவர்கள் கூறி அவர்களது வீட்டு முன்றலை தம் கண்ணீராலும், மலர்களாலும் நிறைத்த வண்ணமுள்ளனர்.
அந்த இளைஞன் எதற்காக இந்த அனியாயத்தை புரிந்தார் என எந்த விபரமும் இன்னமும் தெளிவாக தெரியவில்லை. . இன்றைய இளையோர் அனைவரும் கைத்தொலைபேசிகளுள் புகுந்து மன நோயாளிகளாகி வருகின்றார்கள் என்பதற்கு பாதசாரியின் இப்படுகொலை சான்று . இந்தச் சமூகம் அனைத்து பாதுகாப்புக்களையும் இந்த தொழில் நுட்பங்களால் இழந்து வருகின்றது.
மனநோயாளிகளாக பலர் என்றுமில்லாவகையில் இன்று இனங்காணப் படுகின்றார்கள்.
பாதைகளில் நடந்து செல்வதே இனிப் பாதுகாப்பில்லையா என்கிற பீதி ஒவ்வொருவரையும் உலுக்குகிற பொழுது இது..
கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் நோய்வாய்ப்பட்ட கணவருக்கு இனி யார் துணை ??
எங்கள் பாதுகாப்பான நகர வீதிகளில் நிகழ்ந்த மிக கொடிய வன்முறையிதுவென்றும், இது எங்கள் சமூகத்தில் ஒரு பாரிய இழப்பை உருவாக்கியுள்ளதெனவும், அரிய அன்பான குடும்பத்தைத் தகர்த்து அழித்து விட்டதெனவும்,சமூகத்தில் அயலவர்க்கு உதவ தன் கைகளை அகல விரிக்கிற அம்மையாரின் இழப்பு கொடியதெனவும் பிக்கரிங் மேயர் கெவின் ஆஷே, அவர்கள் தன் இரங்கலில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அம்மையார் தன் தோட்டத்துள், தெருவால் வருவோர் போவோர் நகைச்சுவையாக பார்த்து இரசிக்க வெருளிப் பொம்மையொன்றைக் கூட அழகாக வைத்திருந்தாள் என பொலிஸாரின் குறிப்பு தெரிவிக்கின்றது.
அம்மையார்க்கு எம் அஞ்சலி!


