TamilsGuide

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

ஹெவனகும்புர, பத்தேகம,பொலன்னறுவை மற்றும் வேகந்தவெல பகுதிகளிலிருந்து நான்கு பாடசாலைகளின் மாணவக் குழுவினர் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (30) வருகை தந்திருந்தனர்.

அதன்படி ஹெவனகும்புர ஸ்ரீ புண்யசார மகா வித்தியாலயம், பத்தேகம கிறிஸ்துதேவ ஆண்கள் பாடசாலை, பொலன்னறுவை பகமூன மஹசென் தேசிய பாடசாலை மற்றும் வேகந்தவெல மோரயாய மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வாறு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தும் ‘Vision’ வேலைத்திட்டத்துடன் இணைந்தாக குறித்த பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பின்னர் அதன் வரலாறு குறித்து மாணவர்களுக்கு தௌிவூட்டப்பட்டது.

மேலும் இதன்போது, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நற்பணிகளை மேம்படுத்தல் தொடர்பிலான உரையொன்றை நிகழ்த்தினார்.

இந்த சந்தர்ப்பத்தை அடையாளப்படுத்தும் வகையில் குறித்த பாடசாலைகளுக்கு புத்தகங்கள் பகிர்ந்தளித்தல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு சுற்றாடல் வாரத்தை ஆரம்பிக்கும் வகையில் பெறுமதியான மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என்.குமாரசிங்க, ஜனாதிபதி ஆலோசகர் (சட்டம்) சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார, உதவி பணிப்பாளர் நதீக தங்கொல்ல மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment