நடிகா் ராஜேஷ் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி கூறியதாவது:-
என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனையோ நடிகர்களுடன் நடித்து வருகிறோம். ராஜேஷ் அவ்வளவு நல்ல மனிதர். தப்பு பண்ணுவதற்கே பயப்படுவார்.
என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டால் கூட அவரோட வாழ்த்துதான் முதலில் வரும். கடைசி நிமிடம் வரை நடித்துக் கொண்டிருப்பீர்கள் என என்னைப் பார்த்து சொல்வார்.
கடந்த வாரம் என்னிடம் அவர் பட்டுக்கோட்டை போய் வந்தேன். மகனுக்கு பெண் பார்த்தாச்சு. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி விளக்கமாக உங்களிடம் சொல்கிறேன். என கூறினார்.
ரொம்ப சந்தோஷம் என நான் கூறியதும் மகன் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சித்த மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நானும் அவரும் திருச்சி போயிருந்தோம்.
அப்போது அவரிடம் நான் கன்னிப் பருவத்திலே படம் திருச்சியில் நாம் இருவரும் தான் நடித்தோம். அதற்கு அவர் ஆமாம்... ஆமாம்.. நீங்கள் தான் என் முதல் கதாநாயகி என சொன்னார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கன்னிப் பருவத்திலே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று வருடம் தவறாமல் பேசுவார். சாப்பாடு, ஆரோக்கியத்திலும் ரொம்ப சரியாக இருப்பார். அவர் உடம்பு சரியில்லாமல் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இப்பவும் யாரையோ பற்றி பேசுகிறோம் என்று தான் உள்ளது. ராஜேஷ் சாரை பற்றி பேசுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பதானே பேசினோம் என்று தோன்றுகிறது.
கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது. தற்போது அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இவ்வாறு கண்கலங்கிய படி அவர் கூறினார்.


