வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.
‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !
- தி இந்து .


