பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.
ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.
திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.