‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.
‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.
நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!
நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.
டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம். "
- நாகேஷ் குறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர்


