அமெரிக்காவின் பிரபல உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மூடிஸ் நிறுவனம் இது குறித்து கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவானது ஆகும். இந்தியா பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக, போர் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.
அதேநேரத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் இலக்காகக் கொண்டு உள்ளது.
மேலும், 2025 நிதி ஆண்டில் 57.1சதவீதமாக இருந்த கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2031 நிதியாண்டில் 50 சதவீதமாகக் குறைப்பதையும், 2027 நிதி ஆண்டில் இருந்து வருடாந்திர கடன் இலக்கு கட்டமைப்பிற்கு மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களின் வலுவான பொது முதலீடு மற்றும் மீள்தன்மை கொண்ட நுகர்வோர் தேவை ஆகியவை இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கின்றன.
ஆனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் அது பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பாகிஸ்தான் பெரும் பின்னடைவை எதிர் கொள்ளும்.
தொடர்ச்சியான போர் பதட்ட நிலை பாகிஸ்தானின் வெளிப்புற நிதியுதவியைப் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும். அதன் அந்நியச் செலாவணி இருப்புக்களை பெருமளவில் குறைக்கக்கூடும்.
இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.


