TamilsGuide

இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு புள்ளிவிவரங்களைக் குறைக்க முயற்சிப்பதால், குடியேற்ற திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்தது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவுக்குள் முக்கிய விசா வழிகளுக்கு விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

தொழிலாளர், படிப்பு மற்றும் குடும்ப விசா பிரிவுகளில் விண்ணப்பங்கள் மார்ச் 2025 வரையிலான ஆண்டில் மொத்தம் 772,200 பேரை உள்ளடக்கியது.

இது முந்தைய 12 மாதங்களில் கிட்டத்தட்ட 1.24 மில்லியனை விட 37% குறைவு என்று பிரித்தானிய உள்துறை அலுவலக தரவு தெரிவிக்கிறது.

இந்த சரிவு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட இடம்பெயர்வு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும்.

இதில் வெளிநாட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வருவதற்கான தடை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பில் £38,700 ஆக கூர்மையான உயர்வு ஆகியவை அடங்கும்.
 

Leave a comment

Comment