TamilsGuide

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன் - புதின்

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றும், அது ஏற்படாது என்று நம்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

ரஷிய அரசு ஊடக தொலைக்காட்சியில் பேசிய அவர், உக்ரைனில் உள்ள மோதலை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வர ரஷியாவிடம் வலிமையும் வழிமுறைகளும் உள்ளன என்று புதின் கூறினார்.

ரஷிய பிரதேசத்தில் உக்ரேனிய தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "அந்த (அணு) ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் அவை தேவைப்படாது என்று நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக மே 8 முதல் மே 10 வரை இரண்டாம் உலகப்போரில் ரஷிய வெற்றி தின அணிவகுப்பை முன்னிட்டு 3 நாள் போர் நிறுத்தத்தை புதின் முன்மொழிந்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு அன்றைய தினம் வரும் உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என தடாலடியாக அறிவித்தார்.

ரஷியா அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டின் அணுசக்தி விதிகளை புதின் கடந்த நவம்பர் 2024 இல் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment