TamilsGuide

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இரு நாடுகளும் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதற்கிடையே இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தின.

இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார்.

இதுதொடர்பாக காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பதிவில், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் கவலையளிக்கின்றன. நிலைமையைத் தணிக்க இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் உதவாது. இதை தெரிவிக்க ஜெய்சங்கர் மற்றும் இஷாக் தார் ஆகியோருடன் பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாசுடன் பேசினேன். அப்போது பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதித்தேன். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்ததை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய நாடுகளின் தூதா்களை சந்தித்தாா். அப்போது மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள் என அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Leave a comment

Comment