TamilsGuide

சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் 

திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த  சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்போது சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரான ஆட்சேபனை எதுவும் இருக்குமாயின்  அந்தக் குழுவில் சமர்ப்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

அத்துடன் ”தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் ஆசிய நாடுகளில்  உயர்தரத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 1,800 சிறுவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் எனவும், அவர்களில்  ஐந்து வயதுக்கு குறைவாக 3,300 சிறுவர்கள் காணப்படுகின்றனர் எனவும், இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும்,

உலக நாடுகள் மத்தியிலும் இதுதொடர்பில் விதிமுறைகள் இருக்கின்றன எனவும்,  அதற்கமைய, உயிரிழப்புக்கான காரணத்தை அறியாத, ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காரணத்தை கண்டறியாமல் அந்த உயிரிழப்பை கைவிட்டால் அவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாய்மாரின் உயிரிழப்பு தொடர்பில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அந்த உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிவதனூடாகவே தாய்மாரின் உயிரிழப்புகளை  தாம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment