தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி நேற்று அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இதன்பின் ஆங்கில செய்தி ஊடகமான இந்தியா டுடே நடத்திய நேர்காணலில் அஜித் குமார் பங்கேற்று பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், பத்ம பூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.
பத்ம பூஷன் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் இந்த விருதினை வாங்கியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறேன்.
இந்த மாதிரி விருதுகளை வாங்கும்போதும் தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என தெரிகிறது. எனவே, நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.
என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள், ஷாலினி மற்றும் எனது குழந்தைகள். என்னுடைய வெற்றி, தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள்தான்.
என்னுடைய மனைவி ஷாலினி எப்போதும் என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார். எனக்கு வரும் எந்த அங்கீகாரமும் பெரும்பகுதி எனது மனைவியையே சேரும்" என்று தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார், தல என்று பட்டங்கள் குறித்துப் பேசிய அஜித், "இந்தப் பட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சினிமாவில் நடிக்கிறேன். அதற்கு நல்ல சம்பளமும் வாங்குறேன்.
அதைத் தாண்டி இந்தப் பட்டங்கள் எல்லாம் தேவையில்லை. சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கை, எனக்குப் பிடித்த வேறு பல வேலைகள், கனவுகள் இருக்கின்றன. அதனால் அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே எனக்கு போதும்.
எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமே, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன்.
மக்கள் என்மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்தத் துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.