அப்பா பாடல்கள் எழுதி புகழின் உச்சத்தில் இருந்தபோது, கவிஞர் வாலி பாடல்கள் எழுதத் தொடங்கினார். ஒரு காலகட்டத்தில் கண்ணதாசன், வாலி இந்த இருவர் மட்டுமே தமிழில் தயாராகிய 90% படங்களுக்கு பாடல்கள் எழுதினார்கள்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, என் சக மாணவர்கள் என்னை வம்புக்கிழுக்க உபயோகப்படுத்தும் அஸ்திரம் "வாலி".
வேண்டுமென்றே நான் போகின்ற போது என் காது பட "கண்ணதாசனால் வாலி போல் எழுத முடியாது" என்ற சத்தமாக சொல்லுவார்கள்.
அந்த வயதில் நான் முரட்டு சுபாவம் கொண்டவனாக இருந்தேன். நான் அவர்களுடன் சண்டைக்கு போய், அது அடிதடியாகி, பிரின்ஸ்பல் முன்னால் கொண்டு நிறுத்தப்படுவேன். நிச்சயம் வாரம் ஒரு முறையாவது நிகழும்.
இப்படியே நடந்து நடந்து "வாலி" என்ற பெயரை கேட்டாலே எனக்கு ஒரு வெறுப்பு. என்றைக்காவது இந்த வாலியை பார்த்தால்... என்று மனதுக்குள் கோபம் கொள்வேன்.
சில வருடங்கள் கழித்து என் சகோதரி ரேவதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று. அப்போது வீட்டில் நான் மட்டுமே கார் ஓட்டுவேன். அதனால், திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு பத்திரிகை திருமணத்திற்கு தரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. நான் என்னிடம் தரப்பட்ட அழைப்பிதழ்களை கிட்டத்தட்ட கொடுத்து முடித்து விட்டேன்.
ஆனால் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள் என் மனதில் ஆழமாக பதிந்து இருந்ததால்
வாலிக்கு அழைப்பிதழ் தர விருப்பமில்லை. அதனால் அந்த அழைப்பிதழ் என் கையிலே இருந்தது.
அப்பா பாடல் எழுத ஒரு ஸ்டுடியோவிற்கு போயிருக்கிறார். அப்போது அங்கே வாலி வந்தார். அவரிடம் அப்பா, "என் மகள் திருமண அழைப்பிதழ் வந்துடுச்சா" என்று கேட்க, வாலி, "இன்னும் வரவில்லையே" என்று சொல்லி இருக்கிறார்.
மதியம் வீட்டுக்கு வந்த அப்பா என்னை கூப்பிட்டு, "
"ஏன்டா வாலி இன்னும் கல்யாணம் பத்திரிக்கை வரலைன்னு சொல்றாரு. வாலி வீடு இங்கதான் மகாலிங்கபுரத்தில், நம்ம ஆபீஸுக்கு எதிரே இருக்கு. இன்னும் ஏன் அவருக்கு பத்திரிகை தராமல் இருக்கே" என்று கோபமாக கேட்டார். அப்பா எப்போதும் கோபப்பட மாட்டார். அவரே அப்படி கோபமாக கேட்டவுடன் நான் உடனே கார் எடுத்துக் கொண்டு வாலியின் வீட்டுக்கு போனேன்.
வாலி... வாலி என்று மற்றவர்கள் சொல்லித்தான் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, இந்த வாலி என்பவர் கறுப்பா, சிவப்பா என்பது கூட எனக்கு தெரியாது. மகாலிங்கபுரத்தில் சிறு சிறு தனி வீடுகளாக ஆறு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்ட்டில், கடைசியில் இருந்தது வாலியின் வீடு. வாசல் கதவை தட்டினேன் சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது. வேட்டிட்யும் பனியனுமாக, கண்ணாடி அணிந்த ஒருவர் கதவை திறந்தார்.
"யாரு"?
"வாலி சார் இருக்காங்களா..?
"நீ யாரு..?
"நான் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை".
எதிரில் நின்றவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
"டேய் அண்ணாதுரை.. என் தாத்தா பேரு அண்ணாதுரை ஐயங்கார்"
வாலி என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார். என் மனதில் ஆழமாக பதிந்திருந்த வாலி என்ற வில்லனின் உருவம் அப்படியே பொடிப் பொடியாக தகர்ந்து போனது. இவ்வளவு நல்ல மனிதரையா நான் தப்பாக நினைத்திருந்தேன்..? அன்றைக்கு தொடங்கி அவர் அமரராகும் வரை அவருடனான தொடர்பு நீண்டது.
ஒவ்வொரு வருட பிறப்பு அன்றும் அவரை சந்தித்து வாழ்த்துக்கள் பெறுவது என் வழக்கம். அப்படி ஒரு முறை நான் போனபோது,
" டேய்... உங்க அப்பா எழுதின பாட்டு தான் என்னை அவருக்கு எதிரா கடை போட வச்சது தெரியுமா..?
"அப்படியா என்ன பாட்டு..?
"சுமைதாங்கி" படத்தில் வர "மயக்கமா கலக்கமா"..?
நான் மௌனமாக இருந்தேன் அவரே தொடர்ந்தார்.
"அப்ப நான் சினிமாவுக்கு புதுசு. கொஞ்சம் பாடல்கள் தான் எழுதியிருந்தேன். எம்ஜிஆர் படத்துக்கு நான் பாட்டு எழுதி இருந்தாலும், ஆடிக்கு ஒரு நாள்..
ஆவணிக்கு ஒரு நாள் பாட்டெழுதி, அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழ முடியும்..? நான் சோர்ந்து போய், இனிமே சினிமாவே வேண்டாம் ஊருக்கு போயிடலாம்னு இருந்தேன்.
ஊருக்கு புறப்பட போறேன். அந்த நேரம் பார்த்து என் ரூமுக்கு பி.பி. ஸ்ரீநிவாஸ் வந்தார்...
"நேற்று ஒரு பாட்டு பாடினேன்"னு சொன்னார்.
" என்ன பாட்டு, கொஞ்சம் எனக்காக பாடி காட்டுங்க. நான் ஊருக்கு போக போறேன்" னு சொன்னேன்.
"மயக்கமா கலக்கமா... பாட்டை பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டதுக்கு அப்புறம், அப்படி ஒரு தெம்பு வந்துச்சு. என்ன ஆனாலும் சினிமாவில் பாட்டு எழுதாமல் திரும்பி போவது இல்லை என்று முடிவு செய்து ஊருக்கு போற முடிவை மாற்றிவிட்டு மெட்ராஸ்லயே தங்கிட்டேன். " மயக்கமா கலக்கமா" பாட்டை விட தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் தருகிற பாட்டு வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்லுவேன்.
ஒரு தடவை உங்க அப்பாவை பார்த்தப்ப நான் சொன்னேன்.
"உங்களுக்கு விரோதி உங்க பாட்டு தான் உங்க பாட்டை நான் கேட்கலைனா நான் மதுரைக்கு போய் வேலையில் சேர்ந்து இருப்பேன்"
நான் சொன்னதை கேட்டு உங்க அப்பா குழந்தை மாதிரி சிரிச்சாரு.
அதோட என்கிட்ட, "வாலி... நான் செத்தா நீ தான் எனக்கு இரங்கல் கவிதை பாடணும்"னு சொன்னார். என்ற வாலி என்னிடம் கூறினார்.
தினத்தந்தியில் "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது வாலி என்னிடம், "டேய்... அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களையும் காந்தி எனக்கு தந்து அதை நான் எப்பவோ படிச்சு முடிச்சிட்டேன். ஆனாலும், காலையிலே தினத்தந்தி வந்த உடனே "அர்த்தமுள்ள இந்து மதத்தை" தான் முதலில் படிப்பேன். அதில் அன்னைக்கு, அந்த நாளுக்கு, எனக்கு ஒரு செய்தி இருக்கும். அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது" என்றார்.
அப்பா சில பாடல்களை கேட்டுவிட்டு, "இந்த பாடல்களை எப்ப எழுதினேன்? என்று கேட்பார்.
அதற்கு, இராம. கண்ணப்பன் "இது வாலி எழுதிய பாட்டு" என்பார்.
உடனே அப்பா, வாலிக்கு போன் செய்து பாராட்டுவார். திறமைசாலிகளை பாராட்ட அப்பா என்றும் தயங்கியது இல்லை.
கங்கை அமரன் முதன்முதலாக பார்ட்டிகள் எழுதிய போது, ஸ்டுடியோவில் அவரை பார்த்த வாலி
"என்ன அமர் பாட்டு எழுதுறியா., ஒரு பெரிய மலை... அதுகிட்ட மோதி மோதி இப்பத்தான் நான் ஒரு குட்டி மலையாகி இருக்கேன் தெரியுமா....? என்றாராம்.
அதுதான் வாலி, அப்பாவின் மீது வைத்திருந்த மரியாதை.
நன்றி... திரு. அண்ணாதுரை கண்ணதாசன்...
"என்றென்றும் கண்ணதாசன்" என்ற நூலிலிருந்து...


