TamilsGuide

ஆன்லைன் டிக்கெட் மோசடி - சி.ஐ.டி. வெளியிட்ட தகவல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று (24) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்போதே, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் துறை சமர்ப்பித்த அறிக்கையில், ரயில்வே துறையின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிவான், குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment