குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருத்தல் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த வழக்கு இன்று (24) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு வரவிருந்தது.
இருப்பினும், தலைமை நீதவான் விசாரணைக்கு சமூகமளிக்காததால், வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேலதிக நீதிவான் குறித்த வழக்கை ஜூலை 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்து போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஏழு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


