பொது நிதியுதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் - (STEM) பயிற்சியை விரிவுபடுத்துவதற்காக ஒன்ராறியோ அரசாங்கம் 750 மில்லியன் டொலர்களை முதலிடுகிறது. இந்நிதி ஒவ்வொரு ஆண்டும் 20,500 மாணவர்களுக்கான கூடுதல் இடங்களை உருவாக்கி, மேம்பட்ட உற்பத்தி, வாழ்க்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முக்கிய தொழில்களில் தேவைக்கேற்ப துறைசார் திறன்களை பட்டதாரிகளுக்கு வழங்கும். அமெரிக்க வரிகள் போன்ற உலகளாவிய பொருளாதார அழுத்தங்களிலிருந்து தொழிலாளர்கள் மற்றும் வேலைகளைப் பாதுகாப்பதற்கான ஒன்ராறியோவின் பரந்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக இம்முதலீடுகள் உள்ளன.
"உலகத் தரம் வாய்ந்த STEM கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலமும், ஒன்ராறியோவின் தொழிலாளர்கள் உலகில் சிறந்தவர்களாக இருப்பதை உறுதி செய்வதன் மூலமும், நாளைய வேலைகளுக்கு எங்கள் அரசாங்கம் மாணவர்களை தயார்படுத்துகிறது" என்று அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறினார். இம்முயற்சி ஒன்ராறியோவை புதுமையில் முன்னிலைப்படுத்தவும், உலகளாவிய முதலீட்டிற்கான சிறந்த இடமெனும் நிலையைத் தக்கவைக்கவும் உதவும்.


