TamilsGuide

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு எப்போது? - வாடிகன் தகவல்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். 88 வயதான அவர் கல்லீரல் ஆழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்து விவாதிக்க இன்று ரோமில் உள்ள அனைத்து கார்டினல்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போப் பிரான்சிஸ் உடைய இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (08:00 GMT) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னால் நடைபெறும். கார்டினல்கள் கல்லூரியின் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே வழிபாட்டிற்கு தலைமை தாங்குவார். பின்னர் போப்பின் உடல் ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

போப்பாண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 07:00 GMT மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போப் பிரான்சிஸ் உடைய உடல் தற்போது அவர் 12 ஆண்டுகாலமாக போப்பாண்டவராக இருந்த காலத்தில் வாழ்ந்த சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment