கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு வாடிகனில் வருகிற 26-ந்தேதி இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
போப் பிரான்சிஸ் மரணமடைந்ததை தொடர்ந்து புதிய போப் தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, போப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மிக தலைவர் மட்டுமின்றி உலகின் சிறிய நாடான வாடிகனின் ஆட்சித்தலைவரும் என்பதால் புதிய போப் யார் என்பதை அறிய அகில உலகமும் ஆவலுடன் உள்ளது.
ஒரு போப் மரணம் அடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கத்தோலிக்க திருச்சபையில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட நடைமுறை உள்ளது. சிக்கலான இந்த செயல்பாடுகள் சுவாரஸ்யம் வாய்ந்ததும் கூட.
தற்போது போப் பிரான்சிஸ் மரணமடைந்துள்ள நிலையில், அவரது உடல் நல்லடக்கத்துக்குப்பின் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் (நோவன்டியலி) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கார்டினல்கள் எனப்படும் கர்தினால்கள் தலைமையில் போப் ஆன்ம இளைப்பாறுதலுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
அதேநேரம் புதிய போப் தேர்வு செய்வதற்காக இந்த நாட்களில் உலகெங்கிலும் உள்ள கர்தினால்கள் வாடிகனில் திரளுகிறார்கள். இதற்காக ஒவ்வொருவருக்கும் போதிய நேரம் வழங்கப்படும்.
பின்னர் புதிய போப் தேர்வு செய்வதற்காக 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் கான்கிளேவ் (மாநாடு) தொடங்கும். போப் இருக்கை காலியாக (செடே வேக்கண்டே) இருப்பதாக அறிவிக்கப்பட்ட 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த கான்கிளேவ் தொடங்க வேண்டும்.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர். இதில் பெரும்பாலானவர்கள் (108 பேர்) மறைந்த போப் பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி புதிய போப்பை தேர்வு செய்வர். இதற்காக சிற்றாலயத்துக்குள் நுழைந்தபிறகு வெளி உலகத்துடனான தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். புதிய போப் தேர்வு செய்யும் வரை அவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
இந்த கான்கிளேவ் தொடங்கிய பிறகு தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை புதிய போப்பாக தேர்வு செய்வார்கள். இதற்காக தினமும் 4 முறை வரை ரகசியமாக வாக்களிப்பார்கள்.
இதில் பெரும்பான்மை கிடக்காவிட்டால் அந்த வாக்குச்சீட்டுகளை பிரத்யேக ஸ்டவ் மூலம் எரிக்கப்படும். அத்துடன் புகை போக்கி மூலம் கரும்புகை வெளியிடப்படும்.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வாகவில்லை என்பதை அந்த சிற்றாலயத்துக்கு வெளியே கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், உலகம் முழுவதும் உள்ள மக்களும் அறிந்து கொள்ள முடியும்.
ரகசிய வாக்கெடுப்பில 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறுபவர் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார். அந்த பெரும்பான்மை கிடைக்கும் வரை ஓட்டெடுப்பு தொடர்ந்து நடக்கும். இதனால் இந்த வாக்கெடுப்பு ஒரு வாரம் வரை நீடிக்கலாம்.
அதேநேரம் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 போப்களும் ஓரிரு நாட்களிலேயே தேர்வாகி இருந்தனர்.
இறுதியில் அதிக பெரும்பான்மை பெறும் கர்தினாலிடம் போப் பதவியில் அமர விருப்பம் குறித்து கேட்கப்படும்.
அவர் ஏற்றுக்கொண்டால், புகை போக்கியில் வெண் புகை வெளிவரும். அதன் மூலம் புதிய போப் தேர்வானது உறுதியாகி விடும். அப்போது ஆலய மணிகள் ஒலித்து மகிழ்ச்சியை பிரதிபலிக்கும்.
அதேநேரம் செயின்ட் பீட்டர்ஸ் பேராலய பால்கனியில் கர்தினால் ஒருவர் தோன்றி 'ஹேபிமஸ் பாப்பம்' என அறிவிப்பார். இந்த லத்தீன் வார்த்தைக்கு 'நம்மிடம் ஒரு போப் இருக்கிறார்' என்பது அர்த்தம். அதைத்தொடர்ந்து புதிய போப் பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.
பின்னர் அவர் போப் பதவியேற்று கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தை வழிநடத்துவார்.


