TamilsGuide

பகைவனுக்கு அருளச் சொன்ன பாரதியை எம்.ஜி.ஆர். தான் புரிந்து வைத்திருக்கிறார்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக என்னை நியமித்து அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு பற்றி எனக்கும் அரசுக்கும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் வந்துள்ளன.

முதற்கண் வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி.ஒரு திங்களுக்கு முன்னாலேயே முதல்வர் அவர்கள் இதை தொலைபேசியில் என்னிடம் சொன்னார்கள்.சொல்லும்போதே உங்களுடைய தகுதிக்கு இது ஒன்றும் பெரிய பதவியல்ல ஆனால் என்னுடைய அதிகார வரம்பில் நான் செய்யக் கூடிய பெரிய மரியாதை இது தான்.நான் இதை அறிவிக்கப் போகிறேன்.நீங்கள் இதை மறுத்துவிடக் கூடாது என்றார்.

அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழ வைத்தது. நான் முதலில் மறுத்தேன்.நான் உங்களைப் புகழ்வதாகவும் நீங்கள் அதற்கு விலை கொடுத்ததாகவும் ஊரார் பேசுவார்களே என்றேன்.

ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால் ஊர் போய்ச் சேர முடியாதே என்றார்.நான் ஒப்புக் கொண்டேன்.பதவி பெரியதா சிறியதா என்பதல்ல இதில் குறிப்பிடத் தக்கது.கொடுத்த உள்ளமே நினைவு கூறத்தக்கது.

இன்றைய முதல்வரை நான் எவ்வளவு விமர்சித்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.நான் யார் யாரைப் புகழ்ந்தேனோ அவர்களில் பலர் என்னை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள்.நானும் வெளியில் சொன்னால் வெட்கம் என்று பேசாமல் இருந்திருக்கிறேன்.

பகைவனுக்கு அருளச் சொன்ன பாரதியை எம்.ஜி.ஆர். தான் புரிந்து வைத்திருக்கிறார்.அவரது பெயருக்கு முன்னால் உள்ள எம்.ஜி.என்ற எழுத்துக்கள் Magnanimity and Generosity என்பதைத் தான் குறிப்பிடுகின்றன.

கவியரசு. ஏப்ரல். 1978.

Leave a comment

Comment