சனிக்கிழமை இரவு ஐதராபாத்தில் நடைபெற்ற சஷ்டி பூர்த்தி என்னும் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினராக இளையராஜா பங்கேற்றார். ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பவன் பிரபு இயக்கிய படம் சஷ்டி பூர்த்தி.
ரூபேஷ் கதாநாயகனாக நடித்து சுயமாக இந்த படத்தை தயாரித்துள்ளார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரசிகர்கள் முன் வரவுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஐதராபாத்தில் இளையராஜா இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில் "இசை தெரியும் என்று நான் எப்பொழுதும் நினைத்ததில்லை. ஆனால் இசைக்கு தான் என்னை தெரியும் என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு பாடல் எப்படி வரும் என்பதே தெரியாது .அது தெரிந்தால் அந்த நொடியிலேயே நான் இசையமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
நீங்கள் ஏற்கனவே இப்படத்தின் சில பாடல்களை கேட்டு இருக்கிறீர்கள். இன்னும் சில பாடல்களை கேட்கப் போகிறீர்கள். அவற்றை மீண்டும் எப்பொழுதும் போலவே கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .இந்த படத்திற்காக கீரவாணி எனக்கு ஒரு பாடலை எழுதி அனுப்பி வைத்தார். அவருக்கு என்னோடு இருக்கும் ஆத்ம பந்தத்தை பற்றி அந்தப் பாடலை எழுதியிருக்கிறார் என்று புரிந்தது.
என் மீது அவருக்கு இருக்கும் தூய்மையான அன்பை, அந்தப் பாடலில் காட்டி இருக்கிறார். படக்குழுவினருக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். புதியவர்கள் செய்யும் எந்த முயற்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
அப்படி புதிதாக வருபவர்களை ஊக்குவிப்பது தான் எனது சுபாவம் என்றார். இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் எம் எம் கீரவாணி பேசுகையில் இந்த படத்தில் இளையராஜாவின் இசைக்கு நான் ஒரு பாடல் எழுதினேன். ஏதோ எந்த ஜென்மத்திலேயோ செய்த புண்ணியம் அவரது அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவரது இசையில் பாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் எனக்கு அந்த பாக்கியம் எப்பொழுதும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்டது இத்தனை ஆண்டுகள் கழித்து அவரது இசையில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் பாக்கியம் .
இன்று அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது எவரெஸ்ட் சிகரத்தின் மீது உட்கார்ந்து கொண்ட அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார் .நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில் என்னையும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இப்படி எத்தனையோ பேரை தனது இசையால் ஸ்டார் நடிகர்களாக நிறுத்தியவர் இளையராஜா" என்று பாராட்டி பேசினார்.


