படைப்பாளிகள் எல்லோருமே கொஞ்சம் மண்டைக்கனம் உள்ளவர்கள் என்கிறார்களே உண்மையா?
கவிப்பேரரசுவைரமுத்து அவர்களின் நம்பிக்கை பதில்....
உயரப் பறக்கும் பறவை பூமியை உந்தி எழுகிறது அதை
உந்துதல் என்று புரிந்து கொள்வீர்களா? பூமியை உதைக்கிறது என்று புரிந்து கொள்வீர்களா?
நாதம் தரும் நரம்பு விறைத்திருக்கிறதே அது வீணையின் கர்வமா?
கவியரசர் தமிழ்நாட்டிற்கு இல்லை என்னும் வசை என்னால் கழிந்ததன்றே ..என்று பாரதி பாடியது தலைகனம் அல்ல..
தமிழ் நம்பிக்கை..
டேய் !போடா! என் கதையை போட்ட உன் பத்திரிக்கை எறிஞ்சு போகுமடா என்று புதுமைப்பித்தன் சொன்னது கர்வம் அல்ல..
படைப்பாளுமை..
பாமர ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என்பேர் இறைவன் என்று கவியரசு கண்ணதாசன் பாடியதையும்...
எனக்கு தமிழ் தெரியாது.. ஆனால் தமிழுக்கு என்னை தெரியும் என்று ஜெயகாந்தன் சொன்னதையும்...
அந்த மண்ணில் கரைத்து தன் ரத்தத்தில் ஊற்றி கொள்ளாதவனும்
அந்த வட்டார மொழி வழக்கோடு வாழாதவனும்
இந்த படைப்பின் ஒரு வரியை கூட எழுத முடியாது என்று
கருவாச்சி காவியம் முன்னுரையில் நான் எழுதியதையும்
செருக்கு என்று சொல்லியா எங்கள் சிரமறுப்பீர்கள்..
படைப்பாளியின் தன்னம்பிக்கை என்பது
திமிர் போன்ற வைராக்கியம்
நல்ல திமிரை ரசிப்பது சமூகத்தின் ஆரோக்கியம்...


