யாழ். வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கால்நடைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை வேலணை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வேலனை 6 ஆம் வட்டாரம், சங்கத்தார்கேணி பகுதியிலேயே நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த கும்பலை தங்களது கால்நடைகளை இழந்த உரிமையாளர்களும், பொது மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணியளவில், மடக்கிப் பிடித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கும்பல் திருடிய ஆடுகளை வெளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன், வாகனத்தின் ஊடாக கடத்த முயற்சித்தபோதே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தை அடுத்து ஆடுகளை பறிகொடுத்த உரிமையாளர்களும் இந்த இடத்திற்கு வந்தமையால், அங்கு சற்று சலசலப்பான நிலைமையும் ஏற்பட்டது.
இச் சம்பவத்தின் போது, இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, கால்நடைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், அவரை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவக பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு கால்நடைகள் என நாளாந்தம் பல கால்நடைகள் திருடப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களால் விசனம் தெரிவித்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்டும், இத் திருட்டுச் சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொது மக்கள் ஒன்றிணைந்தாலே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்று நேற்றைய இந்தச் சம்பவம் எடுத்தியம்பியுள்ள நிலையில், இதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு முழுமையான தீர்வை காண முடியும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாக உள்ளது.


