அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை இலகுவானதாக மாற்றியுள்ளன. மனிதகுலத்தின் வாழ்வோடு ஒப்பிடுகையில் அறிவியலின் ஆயுட்காலம் மிகமிகச் சொற்பமே ஆயினும் அதன் சாதனைகள் அளப்பரியன. இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும் அறிவியலின் ஆதிக்கம் உணரப்படுகின்றது.
ஆக்கபூர்வமான விடயங்களுக்கு மாத்திரம் அறிவியல் துணைநிற்கவில்லை. மாறாக அழிவுகளை உருவாக்கும் போரியல் துறையில் கூட அறிவியல் கண்டுபிடிப்புகள் அளவுக்கு அதிகமாக நிறைந்திருக்கின்றன. தற்காப்பு என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் மறைந்துள்ள இந்தக் கண்டுபிடிப்புகள் மனித குலத்தையே நாசம் செய்யக்கூடிய கருவிகளைக் கூட தம்மகத்தே கொண்டுள்ளன என்பது ஆச்சரியமான செய்தி அல்ல.
அறிவியலின் அனைத்துத் துறைகளையும் போலவே போரியல் துறையிலும் நவீன கண்டுபிடிப்புகள் தினம்தினம் நிகழ்ந்த வண்ணமேயே உள்ளன. தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆய்வுகளில் புதியவகைத் தந்திரோபாயங்கள் மாத்திரமன்றி புதிய கருவிகளும் கூட படைக்கப்படுவதைக் காண முடிகின்றது. அத்தகைய புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ஆளில்லா சிறிய பறப்புக் கருவிகளான ட்ரோன்கள் விளங்குகின்றன.
கிட்டிய கடந்த காலத்தில் மிகவும் முக்கிய போர்க் கருவியாக மாறியுள்ள ட்ரோன்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ரஸ்ய-உக்ரைன் போரில் அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
அதேபோன்று, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மத்தியகிழக்கில் நடைபெற்றுவரும் இஸ்ரேலிய பலஸ்தீனியப் போரில், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுத்தி தீவிரவாதிகளும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்களில் ஈடுபட்டமை நினைவுகூரத்தக்கது.
நேரடியாகப் படைகளை நடத்தி போரிடுவதால் ஏற்படக் கூடிய மனித இழப்பைக் குறைப்பது மட்டுமன்றி, எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு துல்லியமான தாக்குதல்களைக் தொடுக்கவும், பாரிய சேதத்தை விளைவிக்கக் கூடிய வல்லமை மிக்கவையாகவும் ட்ரோன்கள் விளங்குகின்றன. மிகக் குறைந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இத்தகைய கருவிகள் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் ஒன்றாகவும் விளங்குகின்றன.
எனினும், இத்தகைய ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் எல்லா நேரங்களிலும் குறித்த இலக்கை மாத்திரம் தாக்குவதில்லை. மாறாக இலக்கு மாறிப் பொதுமக்களையும் கொன்று குவிக்கின்றது. இது தொடர்பிலான செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் தோன்றி மறைந்தாலும் அது பற்றிய விழிப்புணர்வோ, விவாதங்களோ அரசியல் தலைவர்கள் மட்டத்திலும், தொண்டு நிறுவனங்கள் மத்தியிலும் நடைபெறவதாகத் தெரியவில்லை. பொதுமக்கள் கூட இது தொடர்பில் பெரிதும் அக்கறை அற்றவர்களாகவே உள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து செயற்படும் ட்ரோன் போர்கள் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆபிரிக்கக் கண்டத்தில் மாத்திரம் 2021 நவம்பர் முதல் 2024 நவம்பர் மாதம் வரையான மூன்று ஆண்டுகளில் 943 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பெரிதும் அறியப்பட்ட 50 வரையான தாக்குதல் சம்பவங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் என்றே தெரிகின்றது.
ஆபிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் ஆயுத மோதல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணமேயே உள்ளன. குறிப்பாக சூடான், சோமாலியா, நைஜீரியா, புர்க்கினா பாசோ, நைஜர் மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து உள்ளன.
குறிப்பாக, 2022 அக்டோபரில் எதியோப்பியாவின் ஒபு பெக்கே கிராமம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர். ஒரோமோ விடுதலை இராணுவ உறுப்பினர்களின் நடமாட்டம் இந்தக் கிராமத்தில் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவித்தே எதியோப்பிய இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தாக்குதலில் முழுக்க முழுக்க அப்பாவிப் பொதுமக்களே மரணத்தைத் தழுவியிருந்தனர். பொதுமக்கள் இறந்த தகவல் வெளியான பின்னரும் கூட இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்கள் இந்தப் பிராந்தியத்தில் ஓய்வுக்கு வரவில்லை. தொடர்ந்து பல வாரங்களாக இந்தப் பிராந்தியத்தில் பல டசின் கணக்கான ட்ரோன் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பிந்திய தாக்குதல்களின் போது கூட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
2023 டிசம்பர் 5ஆம் திகதி நைஜீரியாவில் அரச படைகளால் நடத்தப்பட்ட ஒரு ட்ரோன் தாக்குதலில் ஒரே தடவையில் 85 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் முஸ்லிம் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ருடுன் புரி என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தவறான தகவல் மூலம் நடைபெற்றதாக அரசாங்கம் பின்னர் ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2023 செப்டம்பரில் சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள கோரோ சந்தை மீது நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 46 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களை சூடானிய இராணுவமே நடத்தியதாகப் பொதுமக்கள் தெரிவித்த போதிலும் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
புர்க்கினோ பாசோவில் 2023 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பவ்ரோ கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
2024 மார்ச்சில் சோமாலியாவின் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யாபி பாம் மற்றும் பக்தாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் கடும் கண்டனங்களைச் சந்தித்த போதிலும் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல தீவிரவாதிகளே என்ற நிலைப்பாட்டில் இருந்து சோமாலிய அரசாங்கம் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை ட்ரோன் பாவனை புதிய ஒரு போக்காகவே கருதப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு தொடக்கம் பத்து வரையான ஆபிரிக்க நாடுகள் இந்த வகைக் கருவிகளைப் பாவித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தங்கள் நாடுகள் எதிர்நோக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ட்ரோன்கள் அவசியமானவை என அந்த நாடுகள் தங்கள் செயற்பாட்டை நியாயப்படுத்தி வருகின்றன. ஆனால், இத்தகைய கருவிகளை துல்லியமாகப் பாவிக்கக்கூடிய உயர்தர தொழில்நுட்பம் அந்த நாடுகளிடம் உள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமே.
அதேவேளை, அரசாங்கங்கள் மாத்திரமன்றி இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒருசில ஆயுதக் குழுக்களும் ட்ரோன்களைப் பாவிக்கத் தொடங்கி உள்ளன என்பது கூடுதல் தகவல். அரசாங்கங்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறும் கடமை அவற்றுக்கு உள்ளதாகக் கருதப்படுகின்றது. ஆனால், ஆயுதக் குழுக்கள் ட்ரோன்களைப் பாவிக்கும் போது அவை பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து விலக்குப்பெறும் அபாயம் உள்ளதை மறந்துவிட முடியாது.
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 48 நாடுகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் மாத்திரமே ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் கத்தியைப் போன்றவை. அது மருத்துவரின் கைகளில் கிடைக்கும் போது அறுவைச் சிகிச்சைக்குப் பயன்பட்டு உயிர்களைக் காக்கின்றது. கசாப்புக் கடைக்காரனின் கையில் உள்ள கத்தியோ உயிர்களைக் கொல்லப் பயன்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் ட்ரோன்கள் பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நல்ல நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதும், தீய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதும் மனிதனின் சிந்தனையைப் பொறுத்த விடயம். பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் சிந்திப்பார்களா?
-சுவிசிலிருந்து சண் தவராஜா


