சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காணப்பட்ட வீசா பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவாக செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சுற்றுலா நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். .
சுற்றுலாக் கைத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் இடையே 8000 பேரளவில் அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முறையற்ற விதத்தில் சுற்றுலாக் கைத்தொழிலில் தொடர்ந்தும் ஈடுபடும் நபர்களை புதிதாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வியாபார நோக்கங்களுக்காக வருகை தருவதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தற்போது அப்பிரச்சனையை முறையாக தீர்த்து வருவதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், அமைச்சிடம் காணப்படும் காணிகளைப் பயன்படுத்தி சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
எல்ல, காலி, சீகிரியா போன்ற பிரதான சுற்றுலாக் கவர்ச்சி மிகுந்த இடங்களின் அண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சுற்றுலாத் தளங்களின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெளிவுபடுத்தினார்.


