TamilsGuide

சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஆட்சி மேலோங்கியிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் அதிகாரிகள் இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பின்னர் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ”சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும்,  நாட்டிலிருந்து கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்குத் தீர்வு அளிக்கப்படும்” எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

மேலும்” மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையிலான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment