அமெரிக்காவின் அடுத்தடுத்த வரிவிதிப்புகளால் உலகமயமாதல் சகாப்தம் நிறைவு பெறுவதாக, இன்று (7) நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தவுள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதித்து அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கிடையே, வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல் இறக்குமதி மீது, 25 சதவீத வரி விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு முறைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சில நாடுகள் அமெரிக்காவுக்கு பதில் வரிவிதிப்பை விதித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வரிவிதிப்பால் உலகமயமாதல் சகாப்தம் நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கும் உரையை பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாளை நிகழ்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு ஊடகத்திடம் கெய்ர் ஸ்டார்மர் பேசுகையில், 'வேலை செய்யும் பெரும்பாலான மக்களுக்கு உலகமயமாதல் ஒத்துப் போகாது. வரி விதிப்பு போர் தான் தீர்வு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
இது மாற்று வழியில் செல்வதற்கான வாய்ப்பாக கருத வேண்டும். வர்த்தக தடைகளை ட்ரம்ப் நீக்கும் போது, போட்டி உருவாகும். இதனால் உள்நாட்டு தயாரிப்புகளின் உற்பத்தி அதிகரிக்கும்,' எனக் கூறியுள்ளார்.
பிரிட்டன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ட்ரம்ப்பின் தீவிர வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிரிட்டன் நிர்வாகத்திற்கு உடன்பாடில்லை. ஆனால், புதிய சகாப்தம் தொடங்க இருப்பதை ஒப்புக் கொள்கிறது. ட்ரம்ப்பின் இந்த அணுகுமுறையை பலர் ஆதரிக்கலாம்,' என்று கூறினார்.