ஜோஷ்வா,தோரா-என இரண்டே இரண்டு முதன்மை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு மிகச்சிறந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் Walter Salles.
ஜோஷ்வா:
ஜோஷ்வாவின் அம்மாவும்,அப்பாவும் பிரிந்து
வாழ்கிறார்கள்.இவன் பிறந்ததிலிருந்தே தனது தந்தையை கண்டதில்லை.அதனால்,தந்தையைக் காண ஆசைப்படுகிறான்.இவனுடைய தாய்க்கு தனது கணவன் மீது நம்பிக்கையில்லையென்றாலும் மகனுடைய ஆர்வத்திற்கு மதிப்பு கொடுத்து அவனுடைய தந்தையை காண முயற்சிகளை மேற்கொள்கிறாள்.
தோரா:ஓய்வு பெற்ற. ஆசிரியை.இரயில்வே நிலையத்தில் உட்கார்ந்து கொண்டு எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்காக கடிதங்களை எழுதுபவள்.திருமணம் ஆகாதவள்.
கதை:Spoiler alert-ஒரு நாள், ஜோஷ்வாவின் தாய்,ஜோஷ்வாவை அழைத்துக் கொண்டு மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து தோராவிடம் தனது கணவனுக்கு ஒரு கடிதம் எழுதும்படி கூறுகிறாள்.அவளும் எழுதுகிறாள்.மறுநாளும் வந்து மற்றொரு கடிதமும் எழுதச் சொல்கிறாள்.
சாலையைக் கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஜோஷ்வாவின் தாய் பேருந்தில் மோதி அதே இடத்திலேயே இறந்து விடுகிறாள்.தாய்க்கு நேர்ந்த இந்த கோர விபத்தை நேரில் கண்ட ஜோஷ்வா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான்.
அந்த ரயில் நிலையத்திலேயே சோறு தண்ணியில்லாமல் கிடக்கிறான்.அந்த விபத்தையும், இந்த பையனின் நிலையையும் கண்டுணர்ந்த தோரா அவன் மீது பரிதாபப்படுகிறாள்.தன்னுடன் வரச் சொல்கிறாள்.அவன் வர மறுக்கிறான்."இந்தா இதை வச்சுக்கோ...ஒன்னோட மனசு மாறுச்சுன்னா ...இந்த அட்ரஸீக்கு வா..."என்று சொல்லி விட்டு கிளம்புகிறாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு நாள் அவளுடைய வீட்டிற்கு அவளுடன் வருகிறான்.
டேபிள் டிராயரில் போஸ்ட் செய்யப்படாத கடிதங்கள் இருப்பதும்,அதில் இவனுடைய அம்மா எழுதிய கடிதம் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைகிறான்;அவள் மீது கோபப்படுகிறான்.
தோரா நேர்,எதிர்மறை கொண்ட பெண்மணிதான்.இவளுக்கு வழக்கம் ஒன்று உண்டு.நாள்தோறும் எழுதப்படும் கடிதங்களை வீட்டிற்கு கொண்டு வந்து, அதை தன்னுடைய தோழியுடன் இணைந்து படித்து, அதில் உள்ள விஷயங்களை ரசித்தபடியும்,பரிகசித்த படியும் எதை போஸ்ட் செய்யலாம் எதை போஸ்ட் செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பார்கள்.
அதன் படி சிறுவனின் அப்பா குடிகாரன் என்பதால், இந்தக் கடிதத்தை படித்து அவன் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காகவே அக்கடிதத்தை தவிர்த்து இருக்கிறாள்.
மறுநாள்,ஜோஷ்வாவை ஒருவனிடம் விலைக்கு விற்றுவிடுகிறாள்.அவன் சட்டவிரோதமான காரியங்களை செய்பவன் என்பதை அறிந்தபிறகு அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக மீட்டுக்கொண்டு வந்து விடுகிறாள்.
இவள் மீது ஜோஷ்வாவுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் அவள் மீது எப்பொழுதுமே கோபமாகவே இருக்கிறான்.தோராவுக்கு அவனை எப்படியாவது அவனுடைய தந்தையிடம் சேர்க்க எண்ணுகிறாள்.
பேருந்தில் பயணப்படுகிறார்கள்.அவன் தூங்கும் நேரத்தில் அவனுடைய பையில் வேண்டிய பணத்தை போட்டு,நடத்துனரிடமும் அவன் இறங்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு அவனுக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு பேருந்திலிருந்து இறங்குகிறாள்.
தோரா தனது ஊரான Rio-வுக்கு செல்ல டிக்கெட்டை எடுத்து விட்டு திரும்பினால் இவன் நிற்கிறான்.பையையும் பணத்தையும் பறிகொடுத்து விட்டதை கேட்டு அவன் மீது அடங்காத கோபம் கொள்கிறாள்.
எங்கும் செல்ல முடியாமல் அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்திலும் தோரா நிற்கிறாள்.
Motel-ல் டிரக்டிரைவர் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, பசியோடு இவர்கள் அவரை பார்க்க அவர் பரிதாபப்பட்டு உணவை இவர்கள் பக்கம் தள்ளி விட இந்த சூழ்நிலையிலேயும் அவன் வீம்பாகயிருக்க,பசி வந்தால் பத்தும் பறந்தும் போகும் என்கிற பழமொழிக்கேற்ப கூச்சப்படாமல் அவர் கொடுத்த உணவை தோரா சாப்பிடுகிறாள்.
டிரக் டிரைவர் இவர்களை தன்னுடனே அழைத்துச் செல்கிறார்.அவள் லேசாக நிம்மதி பெருமூச்சுவிடுகிறாள்.அவள் தனது செயல் மூலம் அவரிடம் தனது அன்பை காண்பிக்க,அவர் அவர்களை புறக்கணித்து விட்டு செல்கிறாள்.அவளுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது.
கையிலே முக்காத்துட்டு இல்லாமல் இவனை எப்படி அவனுடைய தகப்பனிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்கிற குழப்பத்தில் அவனை கண்டபடி திட்டுகிறாள்.அவன் கோபப்பட்டு ஓடுகிறான்.இவளும் அவனை பின்தொடர்ந்து ஓடுகிறாள்.
அந்த இடத்தில் கிறிஸ்துவ முறைப்படி வேண்டுதல் திருவிழா நடக்கிறது.தோரா,பசியின் களைப்பில் சோர்ந்து போய் விழுகிறாள்.
Cut to
இப்போ,தோரா விழித்துப் பார்க்கும் பொழுது அவனுடைய மடியில் அவள்.நெகிழ்ச்சியோடு அவனுடைய பிஞ்சுக் கால்களை இறுக்கிப் பிடிக்கிறாள்.
திருவிழா நடக்கும் இடத்தில் 'உங்களுடைய பிரார்த்தனைகளை இவரிடம் சொல்லுங்கள்...இவர் உங்களுக்காக எழுதித் தருவார்..."என்று சத்தம் போட்டு திருவிழாவில் சேர்ந்த கூட்டத்தை உரத்த குரலோடு அழைக்கிறான்.அவனுடைய சமயோகித புத்தியை நினைத்து ஆச்சர்யப்பட்டு சந்தோஷப்படுகிறாள்.கூட்டமும் வருகிறது.பணமும் சேருகிறது.நல்ல ஓட்டலில் தங்குகிறார்கள்.நன்றாக சாப்பிடுகிறார்கள்.
ஒரு வழியாக ஜோஷ்வாவின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள்.வீட்டை நோக்கி ஆர்வத்தோடு ஓடுகிறான் ஜோஷ்வா.அங்கே,அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
அந்த வீட்டில் உள்ளவன் ஜோஷ்வாவின் தந்தை ஒரு குடிகாரன் என்றும் அவன் வேறுவொரு விலாசத்தில் உள்ளதாகவும் சொல்கிறான்.தனது தந்தையின் குணக்கேடைக் கேட்டு ஜோஷ்வா கவலைப்படுகிறான்.அவன் கொடுத்த விலாசத்தை தேடி செல்கிறார்கள்.
அந்த வீட்டில் இவனுடைய தந்தைக்கு ஏற்கெனவே இரண்டுபிள்ளைகள் இருப்பதை பார்க்கிறான்.அவர்களும் இவனைப்பற்றியறிந்து சந்தோஷப்படுகிறார்கள்.அவர்களோடு சந்தோஷமாக விளையாடுகிறான்,ஜோஷ்வா...
ஜோஷ்வாவை அவனுடைய தந்தையின் வீட்டில் சேர்த்து விட்டோம் என்கிற திருப்தி தோராவுக்கு.என்றைக்காவது ஒரு நாள் அவனுடைய தந்தை அந்த வீட்டிற்கு வருவான் என்கிற நம்பிக்கை ஜோஷ்வாவுக்கு.
ஜோஷ்வா எடுத்துக் கொடுத்த புதுத்துணியை உடுத்திக் கொண்டு, அவனுடைய அறையை திறந்து பார்க்கிறாள்.இரண்டு அண்ணன்களுக்கும் நடுவில் அவன் உறங்கிக்கிடப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.
விடிவதற்குள் சென்று விடவேண்டும் என நினைக்கிறாள்.
ஜோஷ்வா,தூக்கம் கலைந்து எழுந்து வீட்டில் அவள் இல்லையென்பதையறிந்து அவளைத் தேடி ஓடுகிறான்.
தோரா,பேருந்தில் ரியோவுக்கு பயணப்படுகிறாள்.மிகப்பெரிய காரியம் செய்து முடித்த திருப்தி அவளுடைய முகத்தில்.
ஜோஷ்வா, தூரத்திலிருந்து ஒரு புள்ளியாய் மறையும் பேருந்தை பார்க்கிறான்.
அவளுடன் அவனும்,அவனுடன் அவளும் இணைந்து எடுத்த போட்டோவைப் பார்த்து கண்களில் நீர் வடிய பார்க்கிறார்கள்.
Year;1998
Language:போர்ச்சுகீஸ்
Running Time:113 Mins
Director:Walter Salles
இனி,ஒளிப்பதிவு இயக்குநர் செழியன் அவர்கள் எழுதிய 'உலக சினிமா'புத்தகத்தில் உள்ள குறிப்புகளிலிருந்து,
'ஆவணப்பட இயக்குநராக தன் கலை வாழ்க்கையை துவங்கிய இயக்குநர் Walter Salles 1981-ல் தனது முதல் ஆவணப்படத்தை இயக்கினார்.1991-ல் தனது படமாக ஒரு திகில் படத்தை எடுத்தார்.
"ஒரு திரைப்படத்தை, அதனுள் இருக்கும் சின்னசின்ன கூறுகள் ஒன்று சேர்ந்தே ஒரு முழுமையை ஏற்படுத்துகின்றன.இந்தக் கூறுகளில் ஒலியை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.ஒரு படத்தின் கருத்தை தீர்மானிப்பதில் கதையை வலுவாக சொல்வதில் ஒலி மிக முக்கியமான பங்கை வகிக்கிறது"என்று சொல்லும் இயக்குநர் Walter Salles 'Central Station'என்ற இந்தப் படத்தின் ரயில் நிலையத்தில் நடக்கும் துவக்கக் காட்சிக்காக முப்பதுக்கும் மேற்பட்ட சத்த அடுக்குகளை பயன்படுத்தியுள்ளார்.
தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் லத்தீன் அமெரிக்க சினிமாவின் முக்கியமான இயக்குநர்.
இவரது மற்ற முக்கிய திரைப்படங்கள்,On the Road(2009),I Love You(2006),The Motor cycle Diaries(2004)..........மற்றும் சில படங்களையும் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை பார்க்க பரிந்துரைத்த சகோதரர் அந்தோணிசாமி அவர்களுக்கு நன்றிகள் பல.
சே மணிசேகரன்.


