சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு அருகாமையில் நடைபெற்றதுள்ளது.
அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அறிவுரைக்கமைய, “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 58 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
மன்னர் காலத்திலிருந்தே நடைபெற்று வரும் இந்த பண்பாட்டு நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர் “நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் – விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்” என்றும், விவசாயத்தினால் நாடு தன்னிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டும் என்றும், தேசத்திற்கு நலன் வேண்டியும் சம்பிரதாய முறையில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அநுராதபுரம் சிங்கத்தூணின் அருகிலிருந்து வருகைதந்த புத்தரிசி ஊர்வலம் ஜய ஸ்ரீ மஹா போதியை அடைந்தவுடன் சம்பிரதாயங்களுக்கு அமைவாக புத்தரிசி விழா ஆரம்பமானது.
அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புதிய அரிசியை நிரப்ப ஆரம்பித்ததை தொடர்ந்து அனைத்து மாகாணங்களிருந்தும் கொண்டு வரப்பட்ட அரிசியால் தங்கப் பாத்திரம் நிரப்பப்பட்டது.
மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.
சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹாபோதியவிற்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
58 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்த விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கான நினைவுப் பரிசுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் விஷமில்லா விளைச்சலைப் பெறுவதற்காக மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திக்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே தற்போதைய அரசாங்கம் மாற்றிக்கொண்டிருப்பதாகவும், நெல் களஞ்சியங்கள் அழிவடைய இடமளித்து, நெல் சந்தைப்படுத்தல் சபை சுமார் 2,800 கோடி ரூபா கடன் சுமையை கொண்டிருப்பதாகவும், அந்த சரிவுகளில் இருந்து மீட்டெடுத்து மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புச் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன்போது இந்நாட்டின் விவசாயத்துறைக்கு அமைவான அரச பொறிமுறையை போலவே ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் கலாச்சார ஒழுக்கக் கட்டமைப்பையும் இணைத்துக்கொண்டு, தேசிய போருளாதாரத்தினை பலப்படுத்த மீண்டும் விவசாய பொருளாதார பாரம்பரியத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, நீர்ப்பாசன கட்டமைப்பை மீண்டும் புனர்நிர்மானம் செய்வதற்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 02 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வடமத்திய மகா எல திட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள்
தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மரபணு உரிமைகளைப் பாதுகாத்து விதைகளில் தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்க விதைப் பண்ணைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதில் ருவன்வெலிசாய சைத்தியாராம விகாராதிபதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. ஈத்தலவெடுனுவெவே ஞானதிலக தேரர்,லங்காராமாதிபதி வண ரலபனாவே தம்மஜோதி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.