TamilsGuide

உள்ளூராட்சி தேர்தல்- அரசாங்கத்தின் திட்டத்தை இடைநிறுத்துமாறு உத்தரவு

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக மானிய விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தற்போதைய உணவுப் பொதியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வர்த்தக, வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, நன்மைகள் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள 12,753 புதிய விண்ணப்பதாரர்களில் தகுதியான பயனாளிகளுக்கு இந்த உணவுப் பொதி வழங்கப்படவிருந்தது.

அதன்படி,5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் 2,500 ரூபாவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்க திட்டமிடப்பட்ட இந்த பருவகால உணவுப் பொதிக்கான அனுமதியை அமைச்சரவை அண்மையில் பெற்றிருந்தது.

இந்த நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.
 

Leave a comment

Comment