TamilsGuide

உலகளாவிய வர்த்தகப் போர் - தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு

இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (04) மேலும் அதிகரித்துள்ளது.

உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள், பாரம்பரிய பாதுகாப்பான சொத்தான தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிக் கொள்கையால் ஏற்பட்ட பரந்த சந்தை விற்பனை தங்க வர்த்தகர்களைப் பாதித்ததால், விலைமதிப்பற்ற உலோகம் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உச்சத்தை எட்டியுள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 246,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 227,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 1) 24 கரட் தங்கத்தின் விலையானது 245,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 226,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் 3,103.98 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
 

Leave a comment

Comment