TamilsGuide

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

இன்னிலையில் கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதுடன் பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 

Leave a comment

Comment