TamilsGuide

Myanmar Earthquake: 5 நாளாக இடிபாட்டுக்குள் உயிரைப் பிடித்து கொண்டு சிக்கியிருந்த நபர்.. 

மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளன.

நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.

இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை உடைப்பதாக உள்ளது. இதற்கிடையே கடும் போராட்டத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

தலைநகர் நைபிடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியறாக பணியாற்றி வந்தவர் நைங் லின் துன். கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின்போது ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலருடன் அவரும் உள்ளே சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் இடிபாடுகளின் உள்ளே சிக்கியவர்களை கண்டறிய மீட்புக் குழுவினர் எண்டிஸ்கோபிக் கேமராவைப் பயன்படுத்தினர். நைங் லின் துன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த மீட்புக்குழு, அவர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்தனர்.

அவரை ஒரு தரைப்பகுதி வழியாக ஜாக் ஹாமர் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிட்டு அதன்வழியாக மெதுவாக இழுத்து பாத்திரமாக மீட்டனர். அவர் உள்ளே சிக்கி சுமார் 108 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

அவரை மீட்டது தொடர்பாக தீயணைப்பு துறையினர் வெளியிட்ட வீடியோவில், அவர் சட்டை அணியாமல், உடல், தூசியால் மூடப்பட்டிருப்பதை காணலாம். சுயநினைவுடன் இருந்த அவர் வீடியோவில் பலவீனமாக காணப்பட்டார்.

அவருக்கு IV டிரிப் பொருத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நைபிடாவ் நகரில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் துருக்கிய மற்றும் உள்ளூர் குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இளைஞர் நைங் லின் துன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டாலும், பலர் சடலமாகவே மீட்கப்பட்டு வருகின்றனர். 
 

Leave a comment

Comment