TamilsGuide

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, போரின் முக்கிய நோக்கம் ஹமாஸ் அமைப்பின் ராணுவ அமைப்பை அழிப்பது தான் என்று பலமுறை கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸின் ராணுவ உளவுத்துறை தலைவரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
 

Leave a comment

Comment