TamilsGuide

பல்கலை வித்தகர் என்றும் வித்தகர் வித்திஎன்று அன்பால் அழைக்கப்பட்ட பேராசிரியர் வித்தியானந்தன்

நண்பர்களாலும் அவரது மாணவர்களாலும் 'வித்தி' என அழைக்கப்பட்ட பேராசிரியர், யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியத்தின் மகனாகப் பிறந்தார். தாயார் பெயர் முத்தம்மா. வீமன்காமம் அவரை வளர்த்தெடுத்த ஊர். அவரது குடும்ப முன்னோடிகள் ஆறுமுக நாவலரின் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களையும் நிறுவியுள்ளார்கள்.
வித்தியானந்தனின் பேரன் சின்னத்தம்பியால் தொடங்கப்பட்டு தந்தையால் வளர்ந்த வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியைக் கற்றார். பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர் வித்தி. இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். இங்கு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தி. தனது 26வது வயதில் இலண்டனில் முனைவர் பட்டம் பெற்றார்.
முனைவர் பட்டப் பேற்றுக்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்தவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் , "தமிழர் சால்பு' எனும் தலை சிறந்த தமிழ் நூலாக மறுவரைவு செய்து தந்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய வித்தியானந்தன் தனது மாணவியாக அறிமுகமான நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாகலிங்கம் மீது காதல் கொண்டு 1957 இல் மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்பன இவரின் பிள்ளைகளின் பெயர்கள். மனைவி கமலாதேவி அவர் நோயுற்று 1977 இல் மறைந்தார்.
ஆகஸ்ட் 1977 இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். அதன் பின்னர் ஜனவரி 1979 இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார். தன்னால் இயன்றளவில் யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றினை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தார். பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக அவ்வவ்போது எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாயின. கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார். இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பேராசிரியர் வித்தியானந்தன் கலந்து கொண்டார். 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு தனி நாயக அடிகளுடன் முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன்.இந்த இடத்தில் மில்க் வைட் கனகராசாவையும் நினைவு கொள்ளல் அவசியம்
ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தலானார். தனது குருவான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகச் செயற்பாடுகளின் பரிணமிப்பாக நாட்டுக் கூத்துகளை நவீன வாழ்முறைக்கு உகந்த வகையில் நவீனப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றி, பல நாட்டுக்கூத்துப் பிரதிகளை அச்சேற்றினார்
யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரணுற்ற துயரையும் சந்தித்தார்.இதனால் மன விரக்திக்கு உள்பட்டார் . இது அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். அந்த மனச்சுமையோடு 1989 இல் அவர் மறைந்தார்.

அவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது. இலங்கைத் அஞ்சல் திணைக்களம் 1997 நவம்பர் 11 அன்று வித்தியானந்தனின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
1960 களிலிருந்து அவர் தமது பெரிய உடம்பையும் தூக்கிகொண்டு ஓடி ஒடி ஈழத்தில் தமிழர்,முஸ்லிம்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் அடிக்கடி பிரயாணம் செய்து தமிழ்ப் பணியும் கலைப்பணியும் புரிந்தார்.
அவரது மிகபிரதான பணிகளில் ஒன்று நாட்டார் இயலுக்கும் கூத்து வளர்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பாகும்.
தமிழரின் உயர் கலைகளாக சில கலைகள் கோலோச்சிய வேளை அதன் மறு பக்கமான நாட்டார் கலைகளையும் கூத்துகளையும் நாட்டார் பாடல்களையும் முதன்மைப்படுத்தினார் பேராசிரியர் சு.வித்தியானந்தன்
தான் மட்டும் இயங்காது இதில் இயங்க அவர் ஒரு பரம்பரைகுழுவை யே உருவாக்கினார்.
தமிழ்நாட்டுப்பல்கலைக் கழகங்களில் நாட்டாரியலும் கூத்தும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படிருந்த காலத்தில் அவற்றின் மீது ஆய்வாளரினதும் பொது மக்களினதும் கவனக்குவிப்பைத் திருப்பியவர் அவர்
அச்சிந்தனையைபேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் இருந்து கற்றுக்கொண்திருப்பார் அல்லவா?
நாடகமும் அரங்கியலும் எனும் பாட நெறி பல்கலைக்ழகத்தில் ஒரு பாட நெறியாக அத்திவாரமிட்டவர் அவர்.
அவர் காலத்திலேயே அந்நெறி யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.(இந்த எதிர்ப்பு இல்லை மறை காயாக இருந்து வந்துள்ளது போலும் )
இலக்கணத்தை எந்தவித அலுப்பும் ஏற்படுத்தாமல் மாணவர்களுக்கு அவர் சுவராஸ்யமாக் கற்பிக்கும் பாணி தனித்துவமானது .
பிறையன்பன் எனும் பெயரில் இஸ்லாமிய இலக்கியம் பண்பாடு பற்றிக்கட்டுரைகள் வரைந்தவர் இவரே .
ஓர் பிரதேசத்தையும் உயர் மட் ட த்தையும் குவி மையப்படுத்தியிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியம் கலைகள் பற்றிய சிந்தனைகளையும் போக்குகளையும் இலங்கையின்
மன்னார்
மட்டக்களப்பு
வன்னி
சிலாபம்
மலைநாடு
என பல பிரதேசங்களையும் தமிழ் பேசும் இனமான இஸ்லாமியரையும்(இவர்களும் தமிழர்கள்தான் ,மதம் மட்டும் இஸ்லாம் ) உள்ளடக்கிச் சிந்திக்க வைத்தவருள் வித்தியானந்தன் முக்கியமானவர்.
இவரைப்பற்றி மௌ னகுரு பின்வருமாறு கூறினார்,(அவரை 1958 ஆ ம் ஆண்டில் முதல் நாள் சந்தித்த எனது பாடசாலை நாளும்
அவரால் 1961 ஆம் ஆண்டு தொடக்கம் 1965 வரை செதுக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக நாட்களும்
அவரால் வழிநடத்தப்பட்ட 1965க்குப் பிந்திய நாட்களும்
அவர் உப வேந்தராயிருந்தபோது அவரது தலைமையின் கீழ் 1980 களுக்குப்பின் பணி புரிந்த யாழ்ப்பாணப் பலகலைக் கழக நாட்களும்
நாடகம், கூத்து காணவும்.
கூத்துக் கலைஞர்களைக் காணவும்
கூத்து நூல்களைத் தேடியும்
இலங்கையின் தமிழர் வாழும் சின்னம்சிறிய அக் குக்கிராமங்களுக்கு எல்லாம் அலைந்து சென்ற அந்த நாட்களும் ஞாபகம் வருகின்றன
என் வாழ்வில் மாத்திரமல்ல
அவரைச் சந்தித்த அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பெரும் மனிதர் பேராசிரியர் வித்தியானன்தன்) என்று கூறியிருக்கின்றார்
அவர் மறைந்த ஏறத்தாழ பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவரை மதிக்கின்ற, அவரை வணங்குகின்ற பல மாணவர்கள் இன்று இலங்கையில் பல பாகங்களிலும், மற்றும் உலகின் நாலா திக்குகளிலும் அவர் நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பேராசிரியர் ஏனைய மதத்தினரையும் மதித்தார் என்பதற்கு தக்க சான்று அவரது “கலையும் பண்பும்” என்ற நூலாகும். “பிறையன்பன்” என்ற பெயரில் அந்நூலை எழுதியிருந்தார். இஸ்லாமியருடைய கலை, பண்பாடு என்பவற்றை ஆராய்ந்து எழுதப்பட்டதே அந் நூலாகும்.
பேராசிரியரால் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “தமிழியல் சிந்தனை” எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய “கலையும் பண்பும்”, “தமிழியல் சிந்தனை” ஆகிய நூல்கள் சாகித்திய மண்டல பரிசு பெற்றவை. இவை தவிர நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இவரால் பல்வேறு மாத இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் எழுதப்பட்டுள்ளன. பிற நூல்களுக்கான அணிந்துரை, முகவுரை ஆகியன் ஏறத்தாழ ஐம்பது இற்கும்மேல் எழுதிச் சிறப்பித்துள்ளார்.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் இலக்கிய மரபு குறித்த நோக்கினை மேற்படி முகவுரை, அணிந்துரையினை நோக்குவதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம் என முனைவர் மறைந்த செங்கையாழியான் குறிப்பிடுவார். அவ்வளவு இறுக்கமாகவும், சீரிய சிந்தனையுடனும் அவை அமைந்திருக்கும்.
ஈழத்து தினசரிகள் 150இற்கு மேற்பட்ட கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளன். ஆங்கில மொழியிலும் பல கட்டுரகள் எழுதப்பட்டுள்ளன
1974இல் யாழ்ப்பாணத்தில் அவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழாராய்ச்சி மகாநாட்டை வெற்றிவிழாவாக, மக்கள் விழாவாக செய்து முடிப்பதற்கு மேற்கூறிய இப் பண்பும் திட்டமிடும் திறனும் காரணங்களாக அமைந்தன என்று கூறுவதுமிகைப்பட்டதல்ல.
தான் ஒரு பேராசிரியர், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்ற உயர்மட்டதலைக் கனமான எண்ணங்களைவிட மேலும் விஞ்சி உயர்வாக இவரிடத்துக் காணப்பட்டது. அவரது மானுடம் நிறைந்த செயற்பாடுகளே ஏழைகளுக்கு உதவுவதில் அவர் என்றுமே பின் நின்றதில்லை.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவு தொகையினை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் அக்கறையுடன் தொழிற்பட்டு வெற்றிகண்டுள்ளார்.
பல ஏழை மாணவர்கள் இவரது இந்த உதவியால் தமது கல்வியை பூர்த்தி செய்துள்ளார்கள். அவருக்கு சமூகம் பற்றிய அக்கறை அதிகம் காணப்பட்டதே அதற்ற்கு காரணமாகும்.
. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றாலே, தாம் பிறந்து வந்த சமூகத்தை கருத்திற் கொள்ளாது பல்கலைக்கழகம் என்னும் உச்சாணிக் கோபுரத்தில் வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு. சமூகத்தடன் தம்மை இணைத்துக்கொள்ளாது மேற்தட்டில் இருந்து சமூகத்தை அவதானிப்பவர்களே கல்விமான்கள் என்ற இக்கால யதார்த்தத்தையும் கட்டுக்கோப்பையும் உடைத்தெறிந்து நாட்டுப்புறப் பாட்டு, நாட்டுக்கூத்து என்பவற்றை பல்கலைக்கழகத்தால் மதிப்புப் பெறச்செய்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் என்று கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரன் குறிப்பிடுவார்.
முற்காலங்களில் விடிய விடிய ஆடப்பட்டு வந்த நாட்டுக் கூத்துக்களைச் செழுமைப்படுத்தி காலத்திற்கேற்ப சீராக்கி சில மணி நேரங்களில் ஆடப்படுவதாக அமைத்துக்கொண்ட பெருமை சந்தேகத்திற்கிடமின்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களையே சேரும்.
கூத்துக்கள் சமூகத்தில் ஒரு சாரார்க்குரியதென்றிருந்த தாழ்வான கருத்தினை மாற்றி அது தமிழர்களின் சொத்து, அங்கு பல ஆட்டக் கலை வடிவங்கள் உள்ளன. அவை பேணப்படவேண்டும் என்ற கருத்தினை உரமாக்கி அவற்றை உயர் நிலைப்படுத்தியவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள். பல்கலைக்கழக மாணவர்களால் கூத்துக்கள் ஆடப்பட்டபோது அவை அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டன்.
கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலி வதை போன்ற நாட்டுக் கூத்துக்கள் பேராசிரியரால் மேடையேற்றப்பட்டன. என்கிறார் சுதர்சன்
அழியும் நிலையிலுருந்த கூத்து வடிவம் பேராசிரியர் சு. வித்தியானந்தனால் உயிர் பெற்றுக் கொண்டது.
வித்தியானந்தனின் நாட்டுக் கூத்துமரபின் புத்துயிர்ப்பு முயற்சிகாரணமாக கத்தோலிக்க நாடகப் பாரம்பரியம் முக்கியமானதாயிற்று. மன்னாரில் வங்காலையும், பேசாலையும் யாழ்ப்பாணத்தில் குருநகரும் தமிழ்க் கூத்து மரபின் முக்கிய தளங்களாகின. பூந்தான் போசேப்பு பேசப்படத் தொடங்கினார்.
வித்தியின் தேடல்கள் மூலம்
தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள் யாழ்ப்பாணம் இழந்தவை, மன்னார், மட்டக்களப்பு, வன்னிப் பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.
கண்டி சைவ மக்கள் சபைத் தலைமை மூலம் மலையகத்தமிழர் தொடர்பினையும் தம் ஆளுமையின் ஓர் அங்கமாகக் கொண்டவர்
கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்ட போது செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் அவரது மாணவராகத் திகழ்ந்த சிவத்தம்பி அவர்கள்.
1953ஆம் ஆண்டு தான் அவரது மாணவனாக இருந்தபோது பேராதனையில் அவரைக் கண்டு கொண்டது முதல் அவர் எவ்வப்புலமைத் தொழில்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பதை தான் இன்றும் நினைவு கொள்கின்றேன் என்கின்றார் அமரர் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக 1979 ஆம் ஆண்டு பதவியேற்று 1989 வரை பணிபுரிந்தார்
இவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை என்று பேராசிரியர் கந்தையா தேவராசா அவர்கள் கூறியிருக்கிறார்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய போதும், தமிழ்த்துறை மாணவர்களுக்கு தொல்காப்பியம் - சொல்லதிகாரம், சிலப்பதிகாரம், நாச்சியார் திருமொழி, திருக்கோவையார், பாரதி பாடல்கள், தமிழர் பண்பாடு. துமிழ் இலக்கிய வரலாறு ஆகியனவற்றை விரும்பிக் கற்பித்தார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்னூல் இலக்கணத்தை, இவரே கற்பித்தார். “கடினமான இலக்கணத்தைக் கனியாக்கி வழங்குவதிலே அவர் வல்லவர்” என்று பலரும் போற்றிப் புகழ்வது இன்றும் கண்கூடு .
தமிழருடைய இலக்கியங்களை மாத்திரமல்லாமல், அவர்களுடைய அரசியல், வணிகவியல், கலைகள், கல்வி, சமூக நிலை ஆகியனபற்றி வரலாற்று முறையிலே ஒழுங்கான தரவுகளையும் தகவல்களையும் சேகரித்து கற்பித்து விழிப்பு நிலையை ஏற்படுத்தியவர்
பல்கலைக்கழக மலர்களில் இதழ்களில் தமிழ் இலக்கியப் படிப்பு, சோழர் காலத் தமிழிலக்கியம், விசய நகர நாயக்கர் தமிழ் இலக்கியம், பாரதி சபதம், பண்தேய்ந்த மொழியினர் கொண்டேத்தும் கோவலன், இஸ்லாமியர் தமிழிற் பாடிய புதிய பிரபந்த வகைகள் முதலிய ஆய்வுக் கட்டுரைகைளை எழுதியுள்ள தோடு மற்றவர்களுக்கும் முன் மாதிரியாக இருந்திருக்கிறார் .
சுருக்கமாக

 

1924 வைகாசி மாதம் 8இல் அவதரித்து , - சனவரி 21, 1989 இல் மறைந்தார்
ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.இலண்டன் பல்கலைக் கழகத்தில் இவர் மேற்கொண்ட ஆய்வின் பயனாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வேடு “A Historical Social and Linguistic Study of Pattuppattu” என்பதாகும்.
மேலும் நாட்டுக்கூத்து வடிவங்களுக்கு உரம் சேர்க்கும் வகையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த அண்ணாவிமார்களை ஒன்று சேர்த்து எங்கெல்லாம் அண்ணாவிமார் மகாநாடு நடாத்தி அவர்களுக்கு கௌரவமளித்து உயர்வடையச் செய்தார். இச் செயற்பாடுகளால் நாட்டுக் கூத்துக்கள் சமூகத்தினரிடம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டது.
இன்று கூத்து ஆடுவதும் தயாரிப்பதும் மிகமிகக் குறைந்து விட்டது. கூத்துக்கள் அழிந்து செல்கின்றன. பல அண்ணாவிமார் தம் கலையைக் கையளிக்காது இறந்து போனார்கள். கூத்துக் கலையைக் காப்பதற்கான முயற்சியில் எவரும் தொட்ச்சியாக முழு ஈடுபாட்டுடன் செயற்படத் தயாராக இல்லை என்பது வருந்தத்தக்கதே
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளை சார்பாக மட்டக்களப்பில் மாவட்ட மாநாட்டை ஒரு வார காலம் நடத்தப்பட்டது. அம்மாநாட்டிற்கு வித்தியானந்தன் தலைமை வகுத்தார். அம்மாநாட்டில் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது, மட்டக்களப்பு பகுதியின் வரலாறு, சமூகம், அரசியல், பொருளியல், மொழி, கலை, சமயம் முதலியவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள்ஆராயப்பட்டன . 1983 ஆம் ஆண்டு முல்லைத் தீவில் மாவட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறப்புற நடத்திய பெருமை இவரையே சாரும் .
பேராசிரியர் வித்தியானந்தன் 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து, யூகோசிலாவியா,ஐ க்கிய அமெரிக்கா, ஐப்பான், மலேசியா முதலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளின் பல்கலைக் கழகங்களில் இவர் ஆய்வுரை நிகழ்த்தினார். இச்சுற்றுப் பயணம் ‘வெளிநாட்டுக் கலைத்தூது’ எனஅறிஞர்கள் இன்றும் கூறுவார்
முருகன் திருகுதாளம்
கண்ணன் கூத்து
பொருளோ பொருள்
தவறான எண்ணம்
சுந்தரம் எங்கே
துரோகிகள்போன்ற கணபதிப்பிள்ளையின்
நாடகங்களை மேடைக்கு கொண்டு வந்தவர் வித்தி அவர்கள்
இவரைப்பற்றி பதிவு நீள்வதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்

Manikkavasagar.Vaitialingam
 

Leave a comment

Comment