TamilsGuide

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு

வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

இதற்காகக் கடற்படையினரின் உதவியுடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவிலிருந்து இந்த முறை 3000 யாத்திரிகளும் இலங்கையிலிருந்து 4000 யாத்திரிகளும் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்காக நாளை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து நாளை காலை 5.00 மணி தொடக்கம் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக 1300 அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment