TamilsGuide

வர்த்தக போர் முட்டாள் தனமானது.. அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த ட்ரூடோ

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை "வர்த்தக போர்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதிபர் டிரம்ப்-இன் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரூடோ இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் கனடா மீது கடுமையாக வரி விதித்துவிட்டு, கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

"இன்று கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. அதன் நெருங்கிய கூட்டாளி மற்றும் நண்பர்" என்று ட்ரூடோ கூறினார்.

அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா 155 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு உடனடியாக 25% வரிவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தும். இதில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு 21 நாட்களில் வரிகளை விதிக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, அமெரிக்காவின் "சட்டவிரோத நடவடிக்கைகள்" அல்லது வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கான திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ட்ரூடோ, வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்ட கனேடியர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வேலை இழப்பவர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் வணிகங்கள் நிலையாக இருக்க உதவிகள் வழங்கப்படும். பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் "இடைவிடாமல் போராடும்" என்று ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்தார்.

Leave a comment

Comment