யாழ் -அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்தார்.
குறித்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாகச் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து முதற்கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மன்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
அத்துடன் 2 அடி ஆழத்துக்கு கீழேயிருந்தே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா? அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா? எனவும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இது குறித்து தனது ஆய்வினை செய்வதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும், அவரே கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாகக் கூறினார்.
இவற்றைக் கருத்திற் கொண்ட நீதவான், முதற்கட்டமாக ஸ்கேன் மூலம் ஆய்வினை செய்வதாகவும், எதிர்வரும் 4 ஆம் திகதி 3 மணிக்கு இது தொடர்பான வழக்கு மன்றில் இடம்பெறும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.