TamilsGuide

கெஹல்பத்தர பத்மேவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கெஹல்பத்தர பத்மேவின் பிரிவுடன் தொடர்புடைய  தரப்பினரையும் கொலை செய்யப்போவதாக கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவு மிரட்டியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் பன்னலவில் உள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து? பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது? ​​கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தபோது, ​​துபாயைச் சேர்ந்த சமீரா என்ற குற்றவாளியிடமிருந்து கிடைத்த பணிப்புரைக்கு அமைய குறித்த வீட்டை வீடியோ எடுத்ததாகக் கூறியுள்ளனர். மேலும் வீட்டிற்கு செல்லும் வழியை வீடியோ எடுத்து தமக்கு அனுப்புமாறு துபாய் சமீரா அறிவுறுத்தியதாகவும் அவ்வப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக பணம் கொடுத்ததால் அவ்வாறு செய்ததாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பன்னல கொஸ்வத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இருவரும் தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் நாளை (27) வரை தடுத்து  நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment