TamilsGuide

விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucketயின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கை விமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) அறிவுறுத்தலுக்கமைய இரத்மலானை விமானப்படை தளத்தின் பெல் 412 ஹெலிகொப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் Bambi Bucket உதவியுடன் தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மவ்சாகலை நீர்தேக்கத்திலிருந்து நீரைப்பெற்று பரவிக்கொண்டிருந்த தீயை வெற்றிகரமாக அணைத்தது.

இந்த திடீர் தீயினால் ஏட்படவிருந்த பாரிய விபத்தை பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை மிக விரைவாக செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுத்ததினால் தவிர்க்க முடிந்தது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஆயுதப் படைகள் உட்பட ஏனைய அனைத்துத் திணைக்களங்களும் நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகிறது.

இதேவேளை, காடுகளில் தீப்பற்றுவதைத் தடுப்பது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த நாட்களில் காணப்படும் அதிக வறட்சியான காலநிலையுடன் நாடு முழுவதும் காடுகளில் தீப்பற்றக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தீ பற்றியதன் பின்னர் அதனை அணைப்பது மிகவும் கடினமாகும்.

அவ்வாறே அதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மீண்டும் சீரமைக்க முடியாதவை. வன பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டதற்கு இணங்க இலங்கையில் ஏற்படும் காட்டுத்தீ பல்வேறு மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டதாக அன்றி இதுவரை இயற்கையாகவே காட்டுத்தீ உருவானதாக இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியது.

Leave a comment

Comment