TamilsGuide

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 9 கட்சிகளும் கலந்துகொண்டிருந்தன.

அதன்படி தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்), தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்துகொண்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment